கிங் ஆவாரா?

கிங் ஆவாரா?
Published on

தனித்துப்போட்டி என்ற அறிவிப்பை அடுத்து காற்றுவாங்கிக்கொண்டிருந்த சென்னை கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக அலுவலகம் திடீரென மார்ச் 23 முழுநிலவு நாளன்று காலையில் பரபரப்பானது. தேங்கி நின்ற வாகனவரிசையின் பின்னின்று பார்க்கையில் நட்டநடு  சாலையில் கொஞ்ச நேரம் வெடிகள் வெடித்தன. பொதுமக்கள் புரிந்துகொண்டார்கள். மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் வந்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார்கள் என்று. சில நிமிடங்களில் போக்குவரத்து சீரானது. மக்கள் நலக்கூட்டணி வாழ்க என்று டிவி காமிராக்களைப் பார்த்து பத்துப்பதினைந்து தேமுதிக தொண்டர்கள் கூவிக்கொண்டிருந்தனர். ஊடகத்தினர் வேறு யாரையும் உள்ளே அனுமதிக்காமல் கேப்டன் டிவி முன்னிலையில் மகாபாரதக் கதை நிகழ்த்தினார் சிபிஐயின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன்.

இந்த கூட்டணியால் பெருமளவுக்கு மகிழ்ந்துபோயிருக்கிறார்கள் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள். ஐந்து கட்ட பிரசாரத்தை முடித்த நிலையில் அவர்கள் கையில் விழுந்திருக்கிறது கேப்டன் என்கிற கனி. அது திமுக பறிக்க ஆசைப்பட்ட கனி.

கேப்டன் விஜயகாந்த் அணி என்று வைகோவால் பெயர்சூட்டப்பட்டிருக்கும் இந்த அணியில் முதலமைச்சர் வேட்பாளராக கேப்டனை நிறுத்த மக்கள் நலக் கூட்டணி ஒப்புக்கொண்டது.  தேமுதிக வுக்கு 124 சீட்டுக்களும், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 சீட்டுக்களும் ஒதுக்கப் பட்டு விட்டன.  தங்களது கூட்டணி சார்பாக முதலமைச்சர் வேட்பாளர் நிறுத்தப் படமாட்டாரென்று கூறி வந்த வைகோ வெளிப்படையாகவே கேப்டனை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்ததுடன் மட்டுமல்லாமல். தங்களது அணி இனி கேப்டன் விஜயகாந்த் அணி என்றுதான் அறிவிக்கப்படும் என்றும் முழங்கிவிட்டார்.

திமுக தரப்புக்கு ஏமாற்றம்தான் இருந்தாலும் தேமுதிகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார் மு.க.ஸ்டாலின். பழம் நழுவி பாலில் விழவில்லையே என்ற கேள்விக்கு அந்திமழையிடம் பேசிய திமுகவின் இணை செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா இவ்வாறு பதில் தந்தார்:

“ திருடன் நுழைந்துவிட்டால் கிடைக்கும் தடியைக் கொண்டு அடிப்போமே தவிர எந்த தடியென்று தேடமாட்டோம். தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் ஜனநாயக விரோதபோக்கை  எதிர்கொள்ள தேமுதிக வந்தால் அதீத வெற்றிபெறுவோம் என்று நாங்கள் கூறியிருந்தோம். அவர் வந்தால்தான் வெற்றிபெறுவோம் என்கிற நிலையில் திமுகவும் இல்லை. அப்படி நாங்கள் அழைக்கவும் இல்லை. ஆனால் வேறுமாதிரியான முடிவை அவர் எடுத்திருக்கிறார்.  1993-ல் திமுகவை விட்டு வெளியேறிய விஷப்பாலில், அதிமுகவின் கைகூலியாக செயல்படுகிற வைகோவிடம் விழுந்திருக்கிறார். முதல்நாளிலேயே  அவர்களுக்குள் கூட்டணியின் பெயரிலேயே குழப்பம் வந்துவிட்டது.  500 கோடி ரூபாயும் 80 சீட்டும்  தருவதாக தேமுதிகவிடம் திமுகவினர் பேரம் பேசினார்கள் என்றுகூறினார் வைகோ. ஆனால் எந்த பேரமும் நடக்கவில்லை. அதை வைகோவிடம்தான் கேட்கவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் அதே நாளில் மறுத்துவிட்டார். குழப்பம் ஓயவில்லை ”

ஆனால் மக்கள் நலக்கூட்டணியினர் உற்சாகத்தில்தான் இருக்கிறார்கள். ‘’இதுவரை எந்த கூட்டணியிலும் இல்லாத அளவுக்கு மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களிடம் மிகச்சிறப்பான நட்புறவு இருக்கிறது. நாங்கள் மேற்கொண்ட பிரச்சாரப் பயணங்களில் ஒரே வாகனத்தில் தலைவர்கள் பயணித்தார்கள். ஒரே விடுதியில் தங்கினார்கள். ஒன்றாக உணவருந்தினார்கள். ஒன்றாக நடைப்பயிற்சிமேற்கொண்டார்கள். இதுவொரு புதிய அணுகுமுறையாக இருந்தது ” என்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு.

தேமுதிகவுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்திருப்பது பற்றிய கேள்விக்கு, “நாங்கள் மேற்கொண்டது கூட்டணி ஆட்சிக்கான முயற்சி. திமுக, அதிமுகவுக்கு மாற்று என்பதைவிட அதிகாரப்பகிர்வைத்தான் முன்வைத்து முயற்சி செய்தோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்கிற அறத்தைக் காக்க திமுக தயாராக இல்லை. எனவேதான் மக்கள் நலக்கூட்டணி உருவானது. அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் எல்லாம் கலந்த கலவையாக உருவான இக்கூட்டணிக்கு பொதுமக்கள், மாணவர்கள், முதல்முறை வாக்களிப்போர் ஆகியோரின் ஆதரவு இருக்கிறது. இப்போது விஜயகாந்த் கட்சியுடன் மக்கள் நலக்கூட்டணி இணைந்திருப்பது மேலும் வலுவைத்தந்திருக்கிறது. மிக முக்கியமாக கூட்டணி ஆட்சி என்பதுதான் தமிழக மக்கள் முன்பு நாங்கள் வைத்திருக்கும் அம்சம். இதை மக்களும் ஆதரிக்கிறார்கள். இந்த கூட்டணி சட்டமன்றத் தேர்தலையும் தாண்டி உள்ளாட்சி தேர்தல்களுக்கும் தொடரும்” என்கிறார்.

இந்த புதிய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? கிங் ஆவாரா விஜயகாந்த்?

இந்த கேள்விக்கு “விஜயகாந்த் முதலமைச்சராக மாட்டார் என்பது ஊரறிந்த சத்தியம்” என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.மணி.

“தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி விஜயகாந்த் அணி தேர்தலில் யாருடைய வாக்குகளைப் பிரிக்கப் போகிறது என்பதுதான்.  மூன்று முக்கிய கூட்டணிகள் களத்தில் நிற்கின்றன - அஇஅதிமுக, திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணி - இது தவிர பாமக வும் பாஜக வும் வேறு. ஆகவே ஐந்து முனை போட்டி தமிழகத்தில் நிச்சயமாகி விட்டது. அஇஅதிமுக வுக்கு எதிரான வாக்குகள் நான்காக பிரிவதால் வெற்றி ஜெயலலிதாவுக்கா அல்லது கருணாநிதிக்கா என்ற கருத்துத் தான் பரவலாக நிலவுகிறது.  இது வேறு மாதிரியும் ஆகலாம்.  திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் நான்காக பிரிவதால் திமுக கூட்டணியும் வெல்லலாம்.  விஜயகாந்த் முதலமைச்சராக மாட்டார் என்பது ஊரறிந்த சத்தியம்.  ஆனால் அவர் வாக்குகளை பிரிப்பதால் யாருக்கு லாபம்? அம்மாவுக்கா ? ஐயாவுக்கா? என்றால் பதில் சொல்லுவது தற்போது மிகவும் கடினம். முதல் முறையாக நாம் தொங்குசட்டமன்றத்தையும்கூட காணலாம்.  அப்படி நிகழ்ந்தால் அது தமிழ்நாட்டுக்கு நிச்சயம் நன்மைதான் பயக்கும்” என்கிறார் அவர்.

கேப்டன் விஜயகாந்த் அணியை அதிமுக எப்படிப் பார்க்கிறது? அதற்கு வாக்குவங்கி பாதிக்கப்படுமா? என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சிஆர் சரஸ்வதியிடம் கேட்டோம். “அதிமுக வாக்கு வங்கி எங்கேயும் போகாது.  இது தலைவர் உருவாக்கிய கட்சி. 2006-ல் தோற்றபோதே 33 சதவீதம் வாக்குகளைப் பெற்றோம். திமுகவைவிட அதிக வாக்குகள் இது. இந்த மக்கள் நலக்கூட்டணி, விஜயகாந்துடன் சேர்ந்தவுடன் விஜயகாந்த் அணி ஆகிவிட்டது. மக்கள் நலத்தைக் கைவிட்டுவிட்டார்கள். இப்படி பேரையே மாற்றலாமா?” என்று கேட்கிறார் அவர்.

‘’பிரேமலதா விஜயகாந்த் அணி என்றால்தான் கிராமத்தில் இருக்கிறவர்களுக்கும் தெரியும் என்கிறார். இவ்வளவு நாள் இருக்கும் வைகோவைத்தெரியாதா? உலகம் முழுக்க இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்களைத்தெரியாதா? இந்த நான்கு தலைவர்களையும் பார்த்து பரிதாபப்படவேண்டியிருக்கிறது.  தேமுதிகவின் வாக்கு வங்கி நான்கு சதவீதம்தான். மற்ற கட்சிகளையும் சேர்த்தால் 10 சதவீதத்தைத் தாண்டப்போவதில்லை. இந்த தேர்தலில் மற்றவர்களின் வாக்குகளும் எங்களுக்கு வரும். ஏனெனில் இன்றை அம்மாவின் திட்டங்களின் பயன்கள் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்கின்றன. தாலிக்குத்தங்கம், அம்மா உணவகம் இப்படி நிறைய விஷயங்களால்மக்கள் பலன் அடைந்துள்ளனர்.  நாடாளுமன்றத் தேர்தலிலும் நாங்கள் தனியாகத் தான் நின்று பெரு வெற்றி பெற்றோம்’என்கிற சரஸ்வதி “யாரும் யாரையும் கிங் ஆக்கமுடியாது. கிங் ஆக்குவது மக்கள் தான்” என்கிறார்.

அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தை, பேரங்கள், அழைப்புகள் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால் தேமுதிக அதிமுக, திமுக இருகட்சிகளையும் விமர்சனம் செய்தே வந்திருக்கிறது. இரண்டுகட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றுதான் சொல்லி வந்திருக்கிறது. தனித்துப்போட்டியிடுவதாக அறிவித்த அன்று பிற கட்சிகளுக்கும் சூசகமான அழைப்பை விடுத்தார் பிரேமலதா விஜயகாந்த். அதன்படி மக்கள் நலக்கூட்டணியினர் தேமுதிகவுடன் சேர்ந்திருக்கிறார்கள். இதன்மூலம் ஓரளவுக்கு வலிமையான மூன்றாவது அணி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. விஜயகாந்த் கிங் ஆவாரா என்பதை இப்போதே உறுதியாக கணிக்க இயலாது. ஆனால் தமிழக அரசியலில் மூன்றாவது அணிக்கும் ஓர் இடமிருக்க முடியும் என்பது சாத்தியமாகி இருக்கிறது. இந்த அணியை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என்பதில்தான் இந்த தேர்தல் முடிவுகள் அடங்கியிருக்கின்றன.

ஏப்ரல், 2016.

logo
Andhimazhai
www.andhimazhai.com